கு.ப. அன்பழகன்
கவிதைகள்................!
கற்கண்டும் சுமைதானே சுமப்பவர் பார்வையிலே;
சிற்றாறுதல் இதம்தானே காயம்பட்ட மனதினிலே;
நங்கூரம் இல்லா கலம் நிலை நில்லாது;
அச்சாணி இல்லா தேர் நிலை நகராது.
சிறகுகள் அசைவினிலே பறவை உயரம் தொடும்;
அன்பின் இசைவினிலே மனிதம் சிகரம் தொடும்;
கலங்கரை விளக்கொளி நடுக்கடல் வழிகாட்டி;
குறளீரடி எக்காலமும் வாழ்வு வழிகாட்டி.
14-10-2022
வைகறை ஒலி அலைகள் செவிவருடி தவழும்;
முகிழ் கமழும் நறுமணங்கள் நாசிதனை படரும்;
பசுமை படர்ந்த அழகை விழியகன்று வியக்கும்;
கண் வியந்த காட்சி மேனிதனை சிலிர்க்கும்;
வண்ண மலரினங்கள் மண்ணின் மாண்பு கூட்டும்;
உள்ளம் கிளர்ந்த உணர்வு சிந்தனை தூண்டும்;
நாளின் சிறப்பு வாழ்த்தி உள்ளங்கள் மகிழும்;
இந்நாளும் இனிமை என்றே இயம்பிட இனிக்கும்.
12-10-2022