நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
05-08-2015 - நண்பர்கள் தினம்!
மன்னிய உறவிலே மருவிலா நிகழ்வாய்,
பின்னிய வாழ்வியல் தொடரும் மட்டும்,
அன்னையின் மடியென அனைத்தே வளரும்,
நன்னிய உறவை நட்பே யென்போம்!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
- கவிவளவன்
நண்பர்கள் தினம்
- 07-08-16
நட்பெனும் பாலம் மனதுள் நலம்பட
கூறும் கதைகள்,
நண்பர்கள் தினம்!
30-07-2022
நட்பும் பலவடிவாய் நம்மோடு நடைபயிலும்!
தொட்டும் தொடாத தொடர்நிலை பள்ளியிலே!
கட்டுங்கடங்காத சிந்தையோடு கல்லூரியிலே!
விட்டும் விடாத விருப்பத்தில் பணியிடையே!
கொட்டி முழக்கும் கொள்கையாய் தன்னுணர்வில் சில!
பட்டும் படாது,
பக்கத்து வீட்டில் கொள்வதும்,
கட்டிய துணையின் கணக்கில் பெறுவதுவும்,
கிட்டியும் கிட்டாத கிளர்ந்த சிந்தனையாம்!
மொட்டவிழ்ந்த அறிவுக்கு முகமன் கூறுவதாய்,
எட்ட இருந்தாலும் எப்போதும் நிறைவதுவே,
வட்டிலாய் கையிருந்து நாளும் வாழ்த்துவதாம்!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
- கவிவளவன் ஆகிய கு.ப. அசோகன்
முட்புதர் நிறைந்த வழியில் முகமண் கூறி நிற்கும்;
கட்சுவை போலும் களிக்கும்,
நல்லுறவையும் காட்டும்!
மட்டிலா மகிழ்வின் தோழன், மனத்தின் சூழும் மாட்சி!
- கவிவளவன்
நண்பர்கள் தினம் - 06-08-2017
அகமது தேங்கும்
அன்பில்,
அவனி சூழ் பெருமை காக்கும்!
முகமது வாடும் போழ்தில்,
முன்னின்று கணைகள் சூட்டும்!
இகமதில் வாழ்வு காட்டும்
இன்னலை களைய நிற்கும்!
ஜெகமிதில் *நட்பு* ஒன்றே
நெடிது நாள் நிலைத்து வாழும்!
பின்னிய வாழ்வியல் தொடரும் மட்டும்,
அன்னையின் மடியென அணைத்தே வளரும்
நன்னிய உறவை நட்பே யென்போம்!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!நண்பர்கள் தினம்! 04-08-2019
நண்பர் தினமென்று நவின்றார் வாழ்த்துதனை நண்பர் பலருமிங்கே!
நானிலத்தில் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த தமிழருண்டு அறிவீரோ!
புனையில்லை புராணமில்லை! உண்மையின் பதிவாக, கவிதைகளுண்டு!
தமிழ் மூதாட்டி, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமானின் நல்லன்பு,
முரசுகட்டிலில் உறங்கிய
மோசிகீரனாரின் தமிழ்மீது சேரனின் அன்பு!
வடக்கிருந்து உயிர்நீத்த பிசிராந்தையார், சோழன் கோச்செங்கண்ணான் அன்பு!
அரியாசனத்துக்கு சரியாசனம் பெற்ற ஆன்ற புலவர் குழாமுண்டு இங்கு!
கலம்பகம் பாட வைத்து இன்னுயிர் நீத்த நந்திவர்மனின் காட்டிய தமிழன்பு!
அரியனை ஏறிய அரசர் பலருள்
காவியம் படைத்த நாயகர் உண்டு!
அரசைத்துறந்த சேரஇளவல் செதுக்கிய சிலப்பதிகாரம் செவ்விய காப்பியம்!
பாயிரம் பாடுகையில், புலவனை ‘அர்’ என்றும், அரசரை ‘அன்’ என்றதும் மாண்பு!
ஆயிரம் புனைகதைகள் அவிழ்த்து விட்டாலும், செவ்விய தமிழ்பண்பு நாளும் ஏகுமே!
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
அன்புடன்,
கவிவளவன்.
நட்பு! (நண்பர்கள் தினம் 02-08-2026)
நட்புக்கு
இலக்கணத்தை நான் மறையாய்,
தன்
மறையில் எழுதிவைத்தான் வள்ளுவனே!
நட்புக்கு
பலகதைகள் நானிலத்தில் உண்டே!
அவ்வபோது
சிலகதைகள் சொல்லி மகிழ்வோமே!
ஔவைக்கு
நெல்லிக்கனி அளித்த அதியமான்!
பாரிமகளிரை பண்புடனே வளர்த்த கபிலர்!
நட்புக்கு
இலக்கணமாய் கர்ணர் துரியோதனன்!
குசேலனை
மகிழ்வித்த மாயக் கண்ணனென
நேசமிகு
கதைகள் பலவும் உண்டேயிங்கு!
முரசு
கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்கு,
சாமரம்
வீசிய சேரன் கணைக்காலிரும் பொறை!
தலைகொய்து
பரிசுபெறச் சொன்ன குமணன்!
தம்பியின்
சூழ்ச்சி அறிந்தும் தகைவுடன் கேட்டு
நந்திவர்மன் உயிர்நீத்த நந்திக் கலம்பகம் என,
எத்துனையோ
பதிவுகள் தமிழ் இலக்கியத்தில்!
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புடன்,
மகாகவி
பாரதியின் சீர்தோழன் குவளைக்கண்ணன்!
இப்படியாக
நட்பிற்கு நல்லபல செய்திகளுண்டு!
அப்படியோர் நாளை அயலார் கொண்டாட நாமும்
இப்புவியில் நாமும் இணைந்தே நடத்திடுவோம்!
அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தினவாழ்த்து!
நட்புடன்,
கு.ப. அசோகன். 02-08-2026